கண்ணீர் முதல் கடவுள் வரை காயம் ஆற்றும் வெங்காயம்
இப்போதைக்கு நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பது வெங்காயம்தான். நாடு முழுவதும் வெங்காயத்திற்கான விலை எகிறியுள்ளது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளில் களமிறங்கி இருக்கின்றன. இச்சூழலில் இந்த அற்புத ‘காய்’ குறித்த அரிய தகவல்களை அறிவோம்...
இது ஒரு பழமையான மூலிகைப்பயிர். முற்காலத்து யூதர்களின் உணவு. 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் ருசித்தது. இதன் அதிக பயன்பாட்டை அரேபியர்களிடம் பார்க்கலாம்.
நேபாளத்தில் கடவுளுக்கு நிவேதனம் செய்யும் பொருளே வெங்காயம்தான். ‘மருத்துவ தந்தை’ ஹிப்போகிரேட்ஸ் ‘வெங்காய மருத்துவ’த்தை சொல்ல மறக்கவில்லை.
அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளில் மருத்துவப்பொருளாகவே வெங்காயம் மதிக்கப்படுகிறது. தலைவலித்தால் வெங்காயத்தை தட்டிப்போடுகிற நம் பாட்டி வைத்தியமும் இதையே பறைசாற்றி நிற்கிறது.
அசைவம், சைவமென அத்தனை வழி சமையலிலும், தாளிப்பு துவங்கி பஜ்ஜி, பக்கோடா என அத்தனையிலும் வெங்காயம் இருக்கிறது. தென்னிந்தியர்களின் பிரதான உணவாகி, தென்மாவட்ட மக்கள் வாழ்வுடன் இரண்டறக்கலந்த இது வாழ்வின் முக்கிய அங்கமாக நடை தொடர்கிறது.
வெங்காய காரத்திற்கு ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ வேதிப்பொருளே காரணம். இதுவே நெடி நிரப்பி, கண்ணீர் வரவழைக்கிறது. எனவேதான் வெட்டுபவனையே அழ வைத்து விந்தை செய்யும் வெங்காயத்தை தமிழ் இலக்கியங்களும் விட்டுவைக்கவில்லை.
மரத்தில் தொங்கும் ‘தேன் ராட்டு’ எடுக்க, வெங்காயத்தை மென்று ஊதி ஈ துரத்துவதை கிராமத்துச் சிறுவர்களிடம் இன்றும் காணலாம். வகுப்புக்கு விடுமுறை பெற ‘கொஞ்ச நேர காய்ச்சலுக்காக’ பெரிய வெங்காயத்தை இரண்டாய் வெட்டி கைகளின் ‘அக்குள்’களில் சிறிது நேரம் வைக்கும் நகர விடுதி மாணவர்களும் இருக்கின்றனர். இன்றும் திருமண வீடுகளில் வழங்கும் சீர்பொருட்களில் ஒரு தட்டு வெங்காயமும் இடம் பிடிக்கிறது.
சந்தனத்திற்கு மாற்றாக வெற்றிலையுடன் வெங்காயம் சேர்த்து அரைத்த கலவையை புண், வேனற்கட்டு வராதிருக்க குழந்தைகளின் மொட்டைத் தலைகளில் தடவுதல் தென்மாவட்டத்தில் தொடர்கிறது.
தவறுக்கு தண்டனையாக கண்களில் வெங்காயச் சாறிடுதல் தென்னக கிராமங்களில் இருக்கிறது. மயங்கியவரை எழுப்பிட வெங்காயத்தை முகரச் செய்தலும் உண்டு.
வெங்காயத்தில் புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் என உடம்புக்கான ஊட்டச்சத்து அதிகம். இதயத்திற்கு சக்தி தருகிறது. நரை, தலை வழுக்கையை தடுக்கிறது. உடல் வெம்மை தணித்து, ரத்த விருத்தி, எலும்பு வலிமை நிறைக்கிறது. பித்த, கண், வாத நோய்கள் தீர்க்கிறது. பாலில் இட்டு காய்ச்சிக் குடித்தால் சளி, இருமல் பறக்கிறது. இன்னும் உணவே மருந்தாக வெங்காயம் செய்யும் விந்தைகள் ஏராளம்.
‘மண்ணுக்குள் மாயாண்டி, உரிக்க உரிக்கத் தோலாண்டி’ என்ற நம்மூர் வழக்குச் சொற்களில் ஒன்றுமில்லாத விஷயத்திற்கு வெங்காயத்தையே உவமைப்படுத்தியபோதும், ஈவெரா பெரியார் போன்றோர் ‘வெங்காயம்’ என்று அடிக்கடி தங்கள் அற்புத வார்த்தைகளில் பயன்படுத்தியதன் அர்த்தம் இப்போது விளங்குகிறது.
வெங்காய வைத்தியம் குறித்து நம் சித்தர்கள் அருளிச்சென்றவை அதிகம். தோல் உரித்த வெங்காயத்துடன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட, பித்தம், ஏப்பம் குறையும்.
வெங்காயச்சாறு, கடுகு எண்ணெய் சமஅளவு எடுத்துச் சூடாக்கி இளஞ்சூட்டில் காதில் விட இரைச்சல் மறையும். வெங்காய துண்டுகளுடன், சிறிது இலவம் பிசின், கற்கண்டு தூள் சேர்த்து பாலுடன் கலந்து சாப்பிட மூலக்கோளாறு நீங்கும் என வெங்காய மருத்துவத்தின் பட்டியல் நீள்கிறது. இப்படி பல அரிய விஷயங்கள் இருக்கும்போது, வெங்காயத்தின் விலை கூடியதில் ஆச்சரியம் என்ன என்கிறீர்களா...?
‘வாட்ஸப்பில்’ வெங்காயம்
வெங்காயத்தை உரிக்கும்போது கண்ணீர் வருவதற்கு வாட்ஸப்பில் ஒரு கதை வலம் வருகிறது. ஒரு ஊரில் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் மூவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் கத்தரிக்காய் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறது. ‘தங்கள் நெருங்கிய நண்பர்’ இறந்து விட்டதே என்ற சோகத்தில் வெங்காயம், தக்காளி வாய் விட்டு கதறுகின்றன. இந்த சோகத்தில் அலைந்தபோது வாகனம் மோதி தக்காளி நசுங்கி பலியாகிறது. ‘இன்னொரு நண்பரும் மறைந்ததே’ என வெங்காயம் கதறியதாம்.
சிறிது நேரத்திற்கு பிறகு வெங்காயத்திற்கு ஒரு யோசனை. ‘கத்தரி இறந்தது தக்காளியும், நாமும் அழுதோம். தக்காளி இறந்ததற்கு நான் அழுதேன். நான் இறந்தால் யார் அழுவார்’ என எண்ணியவாறே கடவுள் படத்துக்கு முன்பே ஒரே அழுகாச்சியாம். உடனே கடவுள் வெங்காயத்தின் முன் தோன்றி, ‘வெங்காயமே கவலைப்படாதே... இன்று முதல் யார் உன்னை கொல்ல நினைக்கிறார்களோ, அவர்கள் உனக்காக கண்ணீர் விடுவார்கள்’ என்று கூறி மறைந்தாராம். வெங்காயம் உரிக்கும் போது கண்ணீர் வரும் காரணம் இப்போதாவது புரிகிறதா...?
No comments:
Post a Comment